ஜாலியான உணவுத் திருவிழா-தமிழகம்ஆகஸ்ட்-2022
ஒரே வீட்டில் டென்ஷனாக இருக்கவே மதியத்திற்கு மேல் உணவுத்திருவிழா பார்க்கக் கிளம்பினோம். வண்டி நிறுத்த என்று ஒதுக்கப்பட்ட இடம் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. அதையும் தாண்டி நடந்து சென்று உணவுக் கூடம் செல்ல வேண்டியிருந்தது. தமிழக ஸ்பெஷாலிட்டியே இந்த மக்கள்தாம்பா! வானில் பெயர் தெரியாத பறவைகள் சூரிய அஸ்தமனத்தில் பறந்தபடி இருந்தன.
பொதுவாக பொங்கலுக்குத்தான் இப்படி களை கட்டும். ஆனால் இந்த உணவுத் திருவிழாவைக்காண மக்கள் கூட்டம் சிறுவர்,பெரியவர் என வித்தியாசம் இல்லாமல் வந்ததைக் காண ஆச்சரியமாக இருந்தது. அந்த உணவுத்திருவிழா மண்டபத்தில் டெண்ட் அடித்ததைப்போல கொட்டகைதான்! ஆனாலும் மக்கள் வேகமாக வாங்கி உண்பதைக் கண்டபோது இதுபோல இன்னமும் நிறைய உணவுத் திருவிழா நடந்தால் என்ன என்று தோன்றியது. காவல்துறை பல ஏற்பாடுகளைச் செய்த போதிலும் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் கூட்டம் விரும்பியதை வாங்கி உண்டது. அருகில் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தபோதிலும் சளைக்காமல் ஒரு குடும்பம் பாட்டி முதல் பேரன் வரை நின்றுகொண்டே அந்த டெல்லி அப்பளத்தினைச் சுவைத்தபடி இருந்ததைக் கண்டபோது பிரமிப்பாக இருந்தது. மறு பக்கத்திலோ உருண்டை அச்சில் இருந்த பனிக்கூழின் வண்ணத்தைப் பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் தெருவெங்கும் உள்ள அனைத்து சைவ,அசைவ உணவகங்களும் இடம் பெற்றிருந்தன. அங்கெல்லாம் ஏசியும், சேரும் இருக்கும். ஆனால் இங்கோ உணவு மட்டும் இருக்கும். விலை வெளியில் சாப்பிடும் விலைதான்!
உணவுத் திருவிழாவின் ஹைலைட் கோதுமைப்புல் வளர்த்து அரும்பாக்க மருத்துவர்கள் வைத்து நடத்திய ஸ்டால்தான்! மெடலே தரலாம் போங்க! அண்டா நிறைய கொணர்ந்து மக்களைக் குடிக்க வைத்த மருத்துவ மாணவர்களின் புன்னகை இந்திய மக்களைத் தலை நிமிரச் செய்தது.
இன்னொரு பக்கம் விதவிதமான நெல்வகைகளுடன் ஸ்டால்வாசிகள் குடித்துப் பாருங்க! என்ற அன்புக் கட்டளையுடன் அளித்த பானம் தொண்டையினுள் ஒரு சொட்டு சாறு இறங்கிய போது அதில் இந்திய மண்ணின் பண்பாட்டுத் தொன்மை மிளிர்ந்தது.
பிஸ்கட்தான் கொஞ்சம் சொதப்புறாங்க! பழைய ஐட்டம் எல்லாம் வந்தமாதிரி தெரியுது! ஆனால் மக்கள் பயங்கர உஷார் பார்ட்டிப்பா! சூடா கிடைக்கிற உணவுகளை மட்டும் வாய்க்குள் நின்றபடியே தள்ளிக் கொண்டிருந்தனர்.
அறநிலைத்துறை வழங்கிய இலவச சர்க்கரைப் பொங்கல் சூப்பர் டேஸ்ட்.
இது போதாதென்று சுண்டல்,வேர்க்கடலை விற்றபடி பீச்சில் விற்றவர்களெல்லாம் அமர்ந்திருந்தனர். இந்தப் பக்கம் போகலாம். கூட்டம் அதிகம் இல்லை என்று சொல்ல முடியாத அளவு பயங்கர கூட்டம். பொதுவாக காணும்பொங்கலன்றுதான் இப்படி இருக்கும். சென்னைவாசிகளுக்குத் தெரியும். 4 நாட்களும் வெளியிலேயே வர மாட்டார்கள். சென்னையில் பிழைப்பதற்காக பிற மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்துள்ளனர் என்பதை உற்றுப் பார்த்தபோதுதான் கண்டறிய முடிந்தது. கிராமமக்கள்மாதிரி திறந்தவெளி பாத்ரூம்தான். டாய்லட் இருந்தாலும் அங்கு செல்லுங்கள் என இடித்துரைக்க ஆட்கள் இல்லை. .......எவ்வளவுதான் ஆள் போட முடியும்..மக்களுக்கு இன்னமும் செல்ஃப் அவர்னஸ் இல்லை என்கின்றபோது மனதை என்னவோ செய்தது. ஒரே காமெடிதான். அங்கங்கு மக்களின் சிரிப்பு கலந்த குடும்ப சந்தோஷம். இதைப் பெற பணம் பெரிதில்லை என குடும்பத்தலைவன் பர்சைக் காலி செய்து கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது.
மக்களிடையே மகிழ்ச்சி கடலலைபோல சுதந்திரக்காற்றுடன் மெல்ல மெல்ல காற்றில் கலந்து அனுபவித்ததைக் காண மேகக்கூட்டங்கள் தனது நட்சத்திர நண்பர்களுடன் ரசிக்கத் தூது விட்டுக் கொண்டிருந்தன.
என்னடா! பத்திரிகை தமிழும்,ஆங்கிலமும் கலந்து எழுதறேன்னு பார்க்கிறீங்களா! மக்களுடைய இயல்பான பேச்சு வழக்கு நடை எழுதும்போதுதான் வாசகர்கள் நம்மைப் படிக்க வருவார்கள் இல்லையா!
வருடம் ஒருமுறை வரும் பத்திரிகை எழுத்து நடை(தூய தமிழில் இருக்கும்) இது வலைப்பின்னல் மின்னிதழ்தானே! ஜனரஞ்சகம் தேவையல்லவா! சுவாரசியமான நிகழ்வுகளுடன் மறுபடியும் வாசகர்களை அடுத்த இதழில் சந்திப்போம்! அதுவரை பொறுத்திருங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்(பொன்.இராம்) இது புனைபெயர்தான்.
கதை,கவிதைக்கு தந்தை,தாய் பெயர்
பத்திரிகைக்கு கனவு தேவதையின் பெயர் சரிதானா வாசகர்களே! படியுங்கள்! வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் நிறைந்த 24 மணிநேரம்தான். இதில் டென்ஷனே வேண்டாம் அல்லவா! இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும். தமிழ் பேசும் அத்தனை மக்களும் எனது இதழ் படிக்கவேண்டும். நகைச்சுவை கலந்த வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்பதே பத்திரிகையின் நோக்கம். வை.மு.கோதைநாயகி பத்திரிகை நடத்த அந்த காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டாராம்..அவர் இப்ப இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! ஒரு கற்பனையாக நான்கு வரிகள் எழுதுங்களேன் வாசகர்களே!
கருத்துகள்
கருத்துரையிடுக