பூ ஒன்று புயலானது

                 குறுநாவல்(குறும்புதினம்)

      (மாம்பிரஸ்ஸோ வலைத்தளத்தில் வெளியானது)

              முனைவர் பி.ஆர் இலட்சுமி

                                                               2022

 

                                                               1.வைகாசி

கண் சரியாகத் தெரியலை! இதுல எங்கே போய் களை பறிக்கிறது! புள்ளை பள்ளிக்கூடம் போயிருக்குது! வந்தா சாப்பாடு கேட்கும்! என்று கணவன் வீரபத்திரனைக் கடிந்தாள் முருகாயி.

வயித்துப்புள்ளைக்காரியா இருக்கேன்னு கை நீட்டாமல் இருக்கேன். கட்சிக்காரன் ஊர்வலத்துக்கு தலைக்கு 500 தர்றதா சொல்லியிருக்கான். அதுக்காகக் காத்திட்டு இருக்கேன். உனக்கு வேணும்னா எவன்கிட்டேயாவது போய்ட்டு வந்துடு! காதில் கேட்கமுடியாதபடி வசவுகளை அள்ளி வீசியபடி மது பாட்டிலை வீசி எறிந்தபடி சென்ற கணவனை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் முருகாயி.

மித்ரபட்டினத்தில் குப்பைகள் இருந்தாலாவது குப்பை பொறுக்கி பிள்ளையைப் படிக்க வைக்கலாம். விவசாய இடத்துல கர்ப்பிணியாக இருக்கேன்னு வேற ஒதுக்கி வைக்கிறான். கெஞ்சிக்கூத்தாடி வேலை வாங்கி செய்யலாம்னா கண் சரியாகத் தெரியலை! கண்டாக்டர் கண்ணாடிக்கே இரண்டாயிரம் பில் போடுகிறார். இந்த மித்ர பட்டினத்தில் எப்படி எம்புள்ளையைக் கரை சேர்க்கப்போகிறேனோ கடவுளே! என மாரியாத்தாவிற்கு எட்டணாவை முடிந்து வைத்தாள்.

காற்று வேகமாக வீசுது! காத்து கருப்பு மாதிரி தெரியுது! இந்தா புள்ளை முருகாயி! உள்ளே போ! உனக்கு தேவையான காய்கறிகளை நான் சமைத்து எடுத்து வர்றேன் என்று பக்கத்து வீட்டு இட்லிக்கடை ஆயா கமலாம்பிகை கூறினாள்.

அக்கா! உன்னை மாதிரி நாலெழுத்து நான் படிச்சிருந்தேன்னா இன்னைக்கு இப்படி என் புருஷன்கிட்டே சீரழிய வேண்டாமே! எங்க ஆத்தா எட்டு வயசுல ஒரு பெரிய குடும்பத்துல என்னைக் கொண்டுபோய் சோறு மட்டும் போட்டு ஒழுக்கத்தைக் கத்துக் கொடுன்னு சொல்லிட்டாங்க! அவுங்க போட்டுக் கழிச்ச மிச்ச மீதி துணியைத்தான்,சோத்தைத்தான் நான் தின்னு வளர்ந்தேன். தோட்டவேலை முதல் துணி தைக்கிற வேலை வரைக்கும் செய்வேங்கா! எங்காவது வேலை வாங்கிக் கொடுங்களேன்!

உன் திறமையை நீதான் வெளிக்காட்டணும்! உன் வயித்துல இருக்கிற புள்ளை உன் புருஷனுடையது தானா!

தீயை மிதித்ததுபோல முருகாயி கண்கள் சிவக்க கமலாம்பிகையைப் பார்த்தாள்.

என்ன அப்படிப் பார்க்கிறே! நேற்று ராவுக்கு உன் புருஷன் என் வீட்டுக்கு வந்து மீன் குழம்பு சோறு வேணும்னு கேட்டான். கொஞ்சநேரம் அப்படியே படுத்துக் கிடந்தான் என்று இழுத்தபடி சொன்ன கமலாம்பிகையை வெட்டி சாய்ப்பதுபோல முருகாயி பார்த்தாள்.

எட்டு மாசமா இருக்கே! சும்மா சொல்லக்கூடாது! உன் புருஷன் அழகு அள்ளுதும்மா!

ஏண்டி! எடுபட்ட நாயே! உன் உடம்பு சொரிஞ்சுக்க என் புருஷனா கிடைச்சான்!

நீ யார்கிட்டேயோ போய் புள்ளை வரம் வாங்கியிருக்கே அப்படின்னு உன் புருஷன் போதையில நேற்று பினாத்துனான்....தெரியுமா!

களை பறிக்கப் போன இடத்துல உன்னைக் கவுத்திட்டாங்களாம்.

ஆத்தா கமலா! உன்கிட்டே வாங்கிச் சாப்பிட்டால்கூட என் வயித்துப் புள்ளைக்கும், என் புள்ளைக்கும் நோவு வரும்.

பெரிய பத்தினி மாதிரி பேசுறியே! என் புள்ளை களை பறிக்கிறவ புள்ளை மாதிரியா போவுது! பெரிய மல்டி ஓனர் பொண்ணு மாதிரியில்ல போவுது! யாருக்காவது டெய்லி அனுப்பி வைக்கிறியா என்ன! கையில் முறமும், துடப்பமும் இருந்ததை வைத்து கமலாம்பிகையை அடிக்கத் தொடங்கினாள் முருகாயி.

இடுப்பில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாது தொடர்ந்து அவளை அடித்தாள்.

கால்வழியே ரத்தம் ஒழுகத் தொடங்கியது. மயங்கியபடியே சரிந்த முருகாயியை அந்த நேரம் வந்த மகள் கனிஷ்கா அம்மாவைத் தாங்கினாள்.

 

 

 

 

 

 

 

                                                                     2 ஆனி

அம்மா! எழுந்திரும்மா! யார் என்ன சொன்னாலும் நீ ஏம்மா டென்ஷனா இருக்கே! கால் வழியே ரத்தம் போகுதும்மா! என்று சொல்லியபடி கனிஷ்கா பக்கத்து வீட்டு கமிஷனர் மேரி வீட்டின் கதவைத் தட்டினாள். பயந்து போன கமலாம்பிகை ஓடி விட்டாள்.

மேடம்! மேடம்! எங்க அம்மாவை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போகணும்! கொஞ்சம் உதவி செய்ய முடியுமா! என்று பரிதாபமாகக் கேட்ட கனிஷ்காவை மேரி பார்த்தாள்.

உன் அம்மா ஒழுக்கம் குறைந்தவள்னு ஊரே சொல்லுதேம்மா! நீ ஏன் இப்ப அவளுக்காக கவலைப்படறே!

ஒழுக்கக்குறைவு என்பது உடல்நலம் சரியில்லாத நேரத்துலயே பார்க்கிறது மேடம்! அவங்க வயித்துல ஒரு சின்னஞ்சிறு குழந்தை இருக்கு! அது என்ன பாவம் செய்தது மேடம்!

இதோ பார் கனிஷ்கா! நீயும்,நானும் ஒரே கிளாஸ்மேட்! எங்க அம்மா பெரிய இடத்துல வேலை செய்றாங்க! இது உங்க பூர்விக இடம்னு நீ கூரை போட்டுட்டு இருக்கே! அதுக்காக எங்க குடும்ப கௌரவத்தை விட்டுட்டு காரை உங்க அம்மாவுக்கு அனுப்பச் சொல்றியா? என்று எகிறினாள் உமையாள்.

உமையாள்! நான் என் கடமையைச் செய்யணும்...வழி விடும்மா!

அம்மா! இந்த மாதிரி கீழ்த்தர சாதி மக்களுக்கு மருத்துவம் பார்க்க உங்க கார் பயன்படக்கூடாதம்மா!

அவள் அம்மா ஒழுக்கங்கெட்டவள்....அவள் வயிற்றில் இருக்கும் பிள்ளையும் அப்படித்தான் இருக்கும்.

என்னடி சொன்னே! பள்ளியில் ஒண்ணா படிக்கிறேன்னு பார்த்தா என்னையும் சேர்த்து அசிங்கப் படுத்துறே!

யார் உயர்ந்த குலம்! யார் தாழ்ந்த குலம்! உனக்கு ஏன் இந்த புத்தி வந்துச்சு! எங்க அம்மா வயித்துப் பிள்ளை எங்கப்பாவோடது இல்லைன்னு சொல்றியா நீ! நீ என்ன மருத்துவரா! இப்பல்லாம் டெஸ்ட் நிறைய வந்துடுச்சு! யார் புள்ளைன்னு கண்டுபிடிச்சிடலாம். ரொம்ப ஓவரா பேசாதே! உங்க அம்மா வரலைன்னா நான் வேற யாரையாவது வச்சிட்டு போகிறேன் என்றபடி முருகாயியை அப்படியே தூக்கினாள் கனிஷ்கா. கைகளில் அம்மாவின் ரத்தம் பிசுபிசுக்க மயங்கிய அம்மாவை உற்றுப் பார்த்தாள்.

மேரி உடனே பளார் என உமையாள் கன்னத்தில் அறைந்தாள். கன்னத்தில் விழுந்த அறையின் வலி உக்கிரமாக இருக்க அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.

நீ படிக்கிற பெண்மாதிரியா பேசுகிறாய்! நீ யார்னு உனக்குத் தெரியுமா? இத்தனை நாளா மூடி வைத்ததற்குக் காரணம் என்ன தெரியுமா! என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் தாயோட குணம் வரும்னு சொல்வாங்க! நீ பேசுகிற பாஷையிலே அது இப்ப வந்துடுச்சு! வந்து உன்னைப் பேசிக்கிறேன். டிரைவர் கோபால்! காரை எடு! அதில் கனிஷ்காவையும், அவள் அம்மாவையும் வைத்துக் கொண்டு நல்லாள் மருத்துவமனைக்குப் போ! சீக்கிரம்! என்றபடி மேரி தனது பூஜை அறைக்குச் சென்றாள். ஆனி மாதம்தானே இவளைத் தூக்கிட்டு வந்தேன். அந்த குருக்கள் சொன்னாரே! ஆனி மாதம் உனக்கு எல்லாம் புரியும்னு சொன்னாரே! இந்த பொண்ணு நம்மை விட்டு போய்டுவாளோ! கர்த்தரே! நான் இவளை அடித்தது பிழையா! என்று மனதில் மறுகியபடி ஜெபம் செய்யத் தொடங்கினாள். தோட்டத்தில் வைத்திருந்த ரோஜாச் செடியில் பூத்திருந்த ரோஜாக்கள் பறிக்க ஆளின்றி காய்ந்து சருகாகி இருந்தன. சன்னலின் விளிம்பில் அழுது கொண்டிருந்த உமையாளிடம் காற்று காய்ந்த ரோஜா இதழ்களை அள்ளி வீசத் தொடங்கியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                      3. ஆடி

கோபாலண்ணே! அந்த பொம்பளை செத்துப்போனா போகட்டும்! ராத்திரிக்கு கருவாட்டுக்குழம்பு வைத்து புறாக்கறி வதக்கி வச்சிருக்கேன்.வர்றியா என்று கேட்ட கமலாம்பிகையின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் கோபால் காரை வேகமாக ஓட்டத் தொடங்கினான். மனதில் மனைவி சசியின் முகம் வந்தது. காலையிலும் சாப்பிடாமல் போகிறாயே! மஞ்சப் பையில் டிஃபன் வச்சிருக்கேன். சாப்பிடுங்க! என்று உடம்பு முடியாத நிலையிலும் சமைத்து அனுப்பிய மனைவியின் அன்பு முகம் அவன் மனமெங்கும் வீசிக் கொண்டிருந்தது.

நல்லாள் மருத்துவமனை ஊரை விட்டு ஒதுங்கியிருந்தாலும் கைராசிக்கார முத்தம்மாவின் பெயரால் நல்ல குழந்தைகள் மருத்துவமனை என்று பெயர் பெற்றிருந்தது. ஆடி ஒன்றாம் தேதி அன்று கூழ் ஊற்றணும்! அம்மனுக்கு காப்பு கட்டி விளக்கேத்தணும் என்று ஊர் முழுக்க பேச்சுகள் பேசியதைக் காதில் வாங்கியபடி கோபால் நல்லாள் மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தினான்.

கமிஷனர் கார்மாதிரி தெரியுதே! யாருன்னு பாரு மீரா டாக்டர்! என்றபடி முத்தம்மா குரல் கொடுத்தார்.

மீரா ஸ்டெரச்சரை வரச் சொன்னாள். முருகாயியை அதில் படுக்க வைத்து அவசரமாக உள்ளே சென்றாள்.

காரை ரிவர்சில் எடுத்த கோபால் அருகில் இருந்த முத்தூரணிக்கு எடுத்துச்சென்றான். வண்டியை முழுக்கக் கழுவினான். மஞ்சள் பையில் சசி கொடுத்த இட்லியும்,சட்னியும் அவனுக்குப் போதுமானதாக இருந்தன. முத்தூரணியைச் சுற்றி புங்கை மரங்கள் நிறைய வளர்ந்திருந்தன. அவனுக்கு புங்கை மரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதன் அழகை ரசித்தபடி இருந்தான்.

தூரத்தில் மீரா டாக்டர் குரல் கேட்கவே கனவுலகிருந்து நனவுலகிற்கு வந்தான்.

மேரி மேடம் வரலையா கோபால்!

வரலை டாக்டர்!

இந்த பொம்பளைக்குக் குழந்தை பிறந்துடுச்சு! அப்பா என்ன பெயர் போடட்டும்!

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியில்லாமல் பேசிய மீராவை அதிசயமாகப் பார்த்தான் கோபால்.

இந்த டாக்டருக்கு இன்னமும் திருமணம்கூட ஆகவில்லை. அதுக்குள்ளே இந்தமாதிரி எத்தனை கேசைப் பார்க்கணும்னு தலையெழுத்தோ!

நம்ம பொண்ணையெல்லாம் இந்த மாதிரி டாக்டராக்கியே பார்க்கக்கூடாதுப்பா! மனதெல்லாம் ரணம்! சோறுகூட ஒழுங்கா தின்னமுடியாத தொழிலு! எப்படி அழகா மல்லிகைப்பூமாதிரி உடை உடுத்தியிருக்கு இந்தப் பெண்...அம்மன் மாதிரி இருக்காங்க! என்று மனதினுள் கோபால் மீராவை எடை போட்டான்.

வீரபத்திரன்னு எழுதிடுங்க டாக்டர்! அந்தப்பெண்ணுடைய கணவன் பெயர் அதுதான்.

வருவாரா! கையெழுத்து போட........

கஷ்டம்தான்!

அப்ப குழந்தையை என்ன செய்யட்டும்?

ஏன்? என்று நிறுத்தினான் கோபால்.

மீரா! மீரா! என்று முத்தம்மா குரல் எழுப்பினார்.

பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்கள்! இரு! வருகிறேன்! என்றபடி மீரா சென்று விட்டாள்.

நல்லாள் மருத்துவமனையை ஒரு முறை உற்றுப் பார்த்தான் கோபால். எங்கோ பார்த்தபடி இருக்கிறதே! என நினைத்தபடி பழையபடி காருக்குள் அடைக்கலமானான்.

செல்லிடபேசியில் மேரியைத் தொடர்பு கொண்டான்.

நீங்க வந்துடுங்க கோபால்! என மேரி சொல்லவும் மறு பேச்சு பேசாமல் கோபால் கிளம்பிவிட்டான்.

நேராக கனிஷ்காவிடம் சொல்லலாம் எனக் கிளம்புவதற்குள் அவளே மருத்துவமனை செல்வதைக்கண்டு வண்டியை எடுத்துக்கொண்டு கண்ணாடியைச் சரி செய்தான்.

கனிஷ்கா நேராக மீரா டாக்டரிடம் சென்றாள். எங்க அம்மாவை இங்கே சேர்த்திருக்கிறதா சொன்னாங்க!

யார் உங்க அம்மா! என்றான்  வார்டுபாய் குப்பன்.

அண்ணா! எங்க அம்மா பெயர் முருகாயி!

ஓ! இப்ப ஆண் குழந்தை பொறந்துச்சே! அவங்க அம்மாவா!

எனக்குத் தம்பி பிறந்திருக்கானா அண்ணா!

எனக்கு நீ பணம் தர்றியா? கூட்டிக்கொண்டுபோய் காண்பிக்கட்டுமா?

குப்பா! யாரிடமும் பணம் கேட்கக்கூடாது என்று சொல்லியும் பணம் கேட்கறியே! உனக்கு அசிங்கமாக இல்லையா? போ! வெளியே! இந்த மருத்துவமனையில் உனக்கு இடம் கிடையாது என கோபத்துடன் பெரிய மருத்துவர் முத்தம்மா கத்தினார். அவரது சத்தம் கேட்டு நடுங்கிய நீல வண்ணக் காக்கணங்கள் இலைகளை விரித்துச் சதிராடியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                        4.ஆவணி

கோபால் சசி! சசி! என வேகமாக அழைத்தபடி அழைப்பு மணியைத் தட்டினான். இதோ! வந்துட்டேன்....என்றபடி கதவு திறந்தாள் சசி. கோபாலின் முகம் சிவந்தபடி இருக்கவே சசி ஒன்றும் கேட்கவில்லை. ஒரு வாரம் போகட்டும்! பிறகு பேசிக்கொள்ளலாம் என நினைத்த சசி கோபாலின் செல்லிடபேசியை ஆராய்ந்தாள். ஏன் மேரி அம்மா பலமுறை கூப்பிட்டும் பேசவில்லை! என்று கூறி அழைக்கத் தொடங்கினாள். மறுமுனையில் மேரி வந்தார். அம்மா! நான் சசி பேசறேன். அவருக்கு ஏதோ மனசு சரியில்லைன்னு நினைக்கிறேன். அப்புறமா பேசச் சொல்கிறேன். எதுவும் அவசரமா செய்யணுமா! ஒண்ணுமில்லை சசி! நல்லாள் மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தேன். கோபாலுக்குப் பழைய நினைவுகள் துரத்தியிருக்கும்!

சசி மௌனமானாள்!

ஹலோ! சசி...என்ன நீயும் பேசாமல் இருக்கே!

மேடம்! தப்பா நினைக்காதீங்க! அந்த முத்தம்மா இல்லைன்னா இன்று இவர் என்னைத் திருமணம் செய்து ஒரு வேலையில் இருக்க முடியாது. அப்பா,அம்மா யாரும் இல்லைன்னு அவர் நினைக்கக்கூடாதுன்னுதான் நான் பலமுறை அவரிடம் பேசிக்கொண்டே இருப்பேன்.

மும்தாஜ்!

என்ன மேடம்! எதோ புது பெயர் சொல்றீங்க!

அது அவங்க அம்மா பெயர்தான். ஆடி மாதம் பதினெட்டாம்பெருக்கன்னைக்கு முத்தூரணியில் அவங்க அம்மா தூக்கிப் போட்டவங்கதான்.

பெயர் தெரியாதுன்னு சொன்னீங்க என்று இழுத்தாள் சசி.

கோபால் பூர்வீகமே தெரியும்........

வெளிநாட்டிலிருந்து நான்கு பேர் ஒரு ஆராய்ச்சி செய்யறதுக்காக மித்ரபட்டினத்தைச் சுத்தி வந்து இறங்கியிருந்தாங்க! மும்தாஜ் வாப்பாதான் அவங்களுக்கு எல்லா உதவியும் செஞ்சிட்டு வந்தார். சாதி,மதம்னு பார்க்கமாட்டார். இந்து,முஸ்லிம்,கிறித்தவம்னு கிராமத்தைச் சுத்தி இருக்கிற எல்லா கோவில்களையும் காட்டினார். வந்திருந்த அமெரிக்கா,சீனா,ஐரோப்பா,ரஷ்யா நாட்டைச்சார்ந்த ஆண்கள் அவர்கள் நாட்டிலும் இதுபோல இருப்பதாகச் சொல்லி சிரித்துப் பேசியிருக்காங்க! ஆவணி மாதம்தானே நம்ம நாட்டில் பண்டிகை நிறைய வரும்.

அப்ப மும்தாஜூக்கு 14 வயது. படிச்சிட்டு இருந்திருக்கா! ஆராய்ச்சின்னு சொல்லவும் நிறைய உதவி அவளுடைய பள்ளி மாணவர்கள் வழியா செய்து கொடுத்திருக்கா!

வந்திருந்தவர்களில் ஒருவன் ஆராய்ச்சிகளை கெட்ட எண்ணத்தோட பயன்படுத்தறதுக்காக பணம் சம்பாதிக்கிறதுக்காக ஒரு ஆளுகிட்டே குறிப்புகளை ஒப்படைக்கிறதை மும்தாஜ் பார்த்துட்டா! அவனைக் கேள்விமேலே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டா! இயல்பாகவே மும்தாஜூக்கு சுடிதார் போடப் பிடிக்குமே தவிர அவர்கள் மதம் தொடர்பான செய்திகள் பிடிக்காது. உடை பாதுகாப்பு கவசம்.அதை எனது குர்ஆன் போதிக்கிறது எனப் பெருமையுடன் பேசுவாள். அவளது திறந்த கண்களின் ஒளியில் கவரப்பட்ட வெளிநாட்டான் அவளை மனைவியாக்கத் திட்டமிட்டான். வெளிநாட்டிலிருந்து இன்னமும் ஆண்,பெண் எனப் பத்துபேரை ஆராய்ச்சி என்ற பெயரில் வரவழைத்தான். அவளது கைவிரல்கள் எழுதும் அழகைத் தினமும் ரசித்ததாக டைரியில் எழுதி வைத்திருந்தான். ஒருநாள் மும்தாஜ் வாப்பா அந்த டைரியை எதேச்சையாகப் பார்த்துவிட்டார். இதுகுறித்து குருவிடம் கேட்டார்.

குருவா என்றாள் சசி!

ஆமாம்! கோபால் தந்தையின் பெயர் குரு!

கூட வந்திருந்த தருமன் அவனுக்கு மும்தாஜைப் பதிவுத் திருமணம் செய்ய ஒத்தாசையாக இருந்தான்.

பதினாலு வயதுக்குழந்தைக்கு பதிவுத் திருமணமா!

எல்லாமே இவனுங்க செட்டப்!

இது தெரியாத மும்தாஜ் வாப்பா பிரியாணி செய்து விருந்து வைத்தார்.

விருந்துல வாப்பாவுக்கே விஷம் வச்சுட்டானுங்க!

ஊர் தொடர்பான எல்லா தகவல்களையும் மும்தாஜ் இப்ப நல்லாள் மருத்துவமனைக்குப் பக்கத்துல இருக்கிற கோவில் கிழக்கு பக்கத்துல புதைச்சிட்டா! மீதி ஃபைல் எல்லாத்துலயும் வெறும் வெள்ளைக்காகிதத்தை வச்சிட்டா!

குரு மும்தாஜிடம் மிகவும் பாசத்துடன் பழகியதுபோல நடிக்க ஆரம்பித்தான். வாழை இலையில் உணவு சுவையாக இருப்பதைத் தனது நண்பர்களுக்கும் பங்கு கொடுக்க நினைத்து வீட்டிற்கு வரச் சொன்னான்.

அமைதியாக இருந்த மும்தாஜ் பிள்ளையாருக்கு என வைத்திருந்த மஞ்சள் பாதிரி பூக்களைப் பறித்தாள்.

கோவில் பூசாரியிடம் கொடுத்துவிட்டு குருவிற்காகக் காத்திருந்தாள். தந்தைக்கு இவர்கள் வைத்த பிரியாணி அவளது கவனத்திற்கு வந்தது. வாழை இலையில் தயாராக வைத்திருந்ததை எடுத்து குருவின் நண்பர்களுக்குப் பரிமாறினாள். ஊரே மும்தாஜின் செயலைத் திட்டியது.

அடுத்த வருடம் ஜூலை அவளுக்குக் குழந்தை பிறந்தது. முத்தூரணியில் போட்ட பிள்ளையை ஃபாதர் எடுத்து வளர்த்தார். காவலதிகாரிகள் அதுவரை பேசாமல் இருந்தவர்கள் அவளைச் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

அவர் வருகிறார் மேடம்! பிறகு பேசுகிறேன் என்று கூறி ஃபோனைத் துண்டித்தாள் சசி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                             5.புரட்டாசி

யார்கிட்டே பேசினே சசி!

உங்க மேரி மேடம்கிட்டேதான்!

அவங்க என் அம்மா யாருன்னு இதுவரைக்கும் சொல்லவேயில்லை சசி!

சன்னலின் திட்டில் வசதியாக லுங்கியை மடித்துக் கட்டியபடி அமர்ந்தான் கோபால்.

இப்ப உங்க அம்மா யாருன்னு தெரிஞ்சா என்ன செய்யப் போறீங்க!

நல்லாள் மருத்துவமனைன்னு சொன்னாலே என்னவோ அங்கே இருக்குன்னு தோணுது! அப்பா,அம்மா யாருன்னு தெரியாமலே பள்ளியில் நான் வளர்ந்த சூழ்நிலை உனக்குத் தெரியுமா சசி!

பூசாரிகிட்டே  பெருமாள் கோவில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு எத்தனைநாள் படிப்பைத் தொடர்ந்திருக்கேன்னு தெரியுமா! வருத்தமாயிருக்கு சசி! என்னைமாதிரி அனாதைக் குழந்தைகள் உருவாகக்கூடாது சசி!

ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் போய்ட்டு வர்றீங்களே! அப்புறம் என்ன மனக்குறை!

சாதி,மதம்வழியாக திருமணம் குறித்த சட்டதிட்டங்கள் மாறுபடுது!

பெண்கல்வி வேணும்னு வலியுறுத்தி சொன்னவங்க பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டங்களைக் கடுமையாக்கலை! நானே எப்படிப் பிறந்தேனோ! என் உடம்பில் காணப்படுகின்ற பயம்,கோபம்,எனது பெற்றோருடையதாகக்கூட இருக்கலாம். நேரா என் மனம் மசூதியைப் பார்த்து கும்பிடத் தோணுது! குருநானக்ஜெயந்தி கொண்டாட தேதி என்னன்னு தோணுது!

இத்தனைக்கும் நான் ஃபாதர் சர்ச் பள்ளியில்தான் படிச்சேன் இல்லையா!

இப்ப கனிஷ்கா அம்மா நல்லாயிருக்காங்களா? பேச்சை மாற்றினாள் சசி.

கனிஷ்கா அம்மா இறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். அது என் வேலை கிடையாது. மீரா டாக்டரும்,முத்தம்மாவும்தான் பொறுப்பு...என்னைமாதிரி அந்தக் குழந்தையும் அனாதையா நிற்கப் போகுது! கண்கலங்கிய கோபாலை சசி கவலை கலந்த முகத்துடன் பார்த்தாள்.

முத்தூரணியில் போய் என்ன பண்ணீங்க!

வண்டியைக் கழுவி அங்கேயே நீ கொடுத்த டிஃனைச் சாப்பிட்டேன். பக்கத்துல இருக்கிற கோவிலைப் பார்த்துக்கிட்டே இருந்துடலாமான்னு நினைச்சேன்.

ஏன் பின்னே வீட்டுக்கு வந்தீங்க?

நீ எனக்காகக் காத்திட்டு இருக்கியே!

அந்தக்குழந்தையை யார் படிக்க வைப்பா!

வீரபத்திரன் என் குழந்தை இல்லைன்னு கமலாம்பிகையே கதின்னு கிடக்கான்!

யார் அந்த பாலியல் தொழிலாளி கமலாம்பிகையா?

ஆமாம்! அந்த சண்டையிலேதான் முருகாயிக்கு உடம்பு மோசமா போய்டுச்சு!

ஒருவனுக்கு ஒருத்திதான்னு வாழற மனம் எப்பதான் மனுஷனுக்கு வருமோ!

பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையன்னைக்கு விருந்து வைக்கிறதா வேண்டியிருக்கேன்.உங்களுக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தால் அந்த ஆண் குழந்தையை நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுங்க!

சட்டப்படி அதைத் தரமாட்டாங்க சசி!

பிரச்னையை அரசு என்கிற குறுகிய வட்டத்துல போட்டு மிதிச்சு நகர்த்தறாங்க தெரியுமா!

இப்பல்லாம் யாருக்கும் தத்து கொடுக்கிறதை அவ்வளவு சுலபத்துல எளிமையாக்கறதில்லை!

கணவன்,மனைவி இரண்டு பேருடைய வயதைக் கூட்டி அதில் வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டு குழந்தை தருவாங்க! அதுவும் அரசியல்வாதிக்கு என்றால் முதல் மரியாதை! என்னவோ பார்த்தமாதிரி பேசுறீங்க! நமக்கு இன்னமும் 3 மாதத்தில் குழந்தை பிறக்கும். நீங்க ஏன் அதைப் பற்றி கவலைப்படணும்!

நீ படிப்பறிவில்லாமல் இருக்கிறாயே! அதுதான் கவலைப்படுகிறேன்...நான் இல்லாவிட்டால் நீ எப்படி வாழ முடியும்? நானே அனாதை..சொத்து எதுவும் கிடையாது. இட்லி கடை கூடவா எனக்கு இல்லாமல் போகும்!

விதவைகள் வைத்த இட்லி கடையில் காமுகர்கள் செய்த கலாட்டான்னு செய்தி தினமும் பேப்பரில் படிக்கிறோமே! பார்க்கவில்லையா?

டிரைவர் கோபால்! மனதைப் போட்டு வருத்திக்கொள்ளாதே! நான் பிள்ளை பிறந்த பிறகு நம்ம வீட்டருகில் ஓட்டல் திறப்பதாக இருக்கிறேன். கண்ட தெரு நாயும் வந்தால் காவல் துறையிடம் ஒப்படைக்கலாம். இப்ப புரட்டாசி மாதத்திற்கு வீட்டை ஒழுங்கு செய்யவேண்டும்.வா! என்று வீட்டின் அறைக் கதவுகளைத் தூசி தட்டத் தொடங்கினர்.

வெளி கேட்டின் கதவைத் திறந்து கனிஷ்கா தலைவிரிகோலமாக ஓடி வர ஆரம்பித்தாள். அவள் பின்னால் அவளது செல்ல நாய் வந்து கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                           6 ஐப்பசி

ரியா! நீ வெளியே நில்லு! என தனது செல்ல நாய்க்கு ஆர்டர் போட்டபடி கனிஷ்கா கோபால் வீட்டிற்குள் நுழைந்தாள்.

வாம்மா! என சசி கூப்பிட்டாள்.

ஐப்பசி மாத அடைமழை மாதிரி ஏம்மா உன் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்கி வருது!

ஆன்ட்டி! உங்க வீட்டுக்காரர் எங்க அம்மாவை ஆஸ்பிடலில் சேர்த்திருக்கார்! குழந்தை பிறந்தா என்கிட்டே காட்டணும் இல்லையா! அப்பாவும் சரியில்லை! அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலை! உமையாள் அசிங்கமா பேசுகிறாள்....

யாரும்மா உமையாள்?

மேரி மேடத்தோட பெண்தான்!

இப்ப இங்கே எதுக்கு வந்தே?

எங்க அப்பாகிட்டே போகிறதுக்கு எனக்கு விருப்பம் கிடையாது. நான் படிக்கணும்....ஏதாவது ஹாஸ்டலில் உங்க வீட்டுக்காரரைச் சேர்த்து விடச் சொல்லுங்க! எங்க அம்மா செத்துப் போய்ட்டாங்கதானே! என்று கேட்டபடி விக்கி விக்கி அழுதாள்.

முகம் அழுதாலும் நல்ல பளிங்கு போன்ற கண்ணாடிதான் என்று மனதிற்குள் சசி கனிஷ்காவின் அழகை வியந்தாள். சோறு போட்டு வளர்க்காவிட்டாலும் இயற்கை இந்தப் பெண்ணுக்கு சாமுத்ரிகா லட்சணத்தை வாரி வழங்கியிருக்கிறதே! என நினைத்தாள்.

கோபால்! கோபால்! என வாசலில் ராவ் குரல் கேட்டது. உள்ளிருந்த கோபால் அந்த சினிமா புரொட்யூசர் வந்திருக்கான்! இரண்டு பேரும் உள்ளே போய் இருங்க!

ஏன் அங்கிள்! அவர் வந்தா என்ன? அவர் படங்களை நான் பார்த்திருக்கேன்!

பாப்பா! உனக்கு அவனுங்களைத் தெரியாது.....சோறு தண்ணி இல்லைன்னாலும் இருந்துடலாம். கோடிக்கணக்கில் பணத்தை வச்சிக்கிட்டு மானங்கெட்ட வாழ்க்கை வாழ முடியாது பாப்பா! உள்ளே போ! சசி! அந்த பொண்ணைக் கூட்டிட்டு உள்ளே போ! என கத்தினான் கோபால்.

சசி விருட்டென கனிஷ்காவை உள்ளே தள்ளி தானும் அறைக்குள் இருந்து கொண்டு கதவை சாத்தினாள்.

கோபால்! அனாதைக் குழந்தைகள் டிரஸ்ட் ஒண்ணு இருக்கு! உனக்கு தெரிஞ்ச குழந்தைகள் இருந்தா சொல்லு! அப்புறம் அடுத்து எடுக்கப்போற படத்துக்கு சின்ன பொண்ணா புதுமுகம் தேவைப்படுது! இப்ப உள்ளே போச்சே அது யாரு கோபால்!

ராவ்! உன் புத்தி தெரியும்..நீயும்,ரெட்டியும் இடத்தை விட்டு வந்து இந்த மண்ணுல பண்ற லீலை என்னான்னு எனக்குத் தெரியும்...அது விபரம் தெரியாத சின்ன பொண்ணு!

ஹிந்தி படத்துக்கு தேவைப்படுது கோபால்!

அதுக்குன்னு பம்பாயில்,கல்கத்தாவில் இடம் இருக்குபாரு! அங்கபோய்த் தேடு! கிடைக்கும்....இது வீடு.

அது உன் சொந்தக்காரப் பெண்ணா? ஆமாம்! என் தங்கை! என் வீட்டில்தான் இனி இருப்பா! கோபால் பேசியது கனிஷ்காவிற்கு தெளிவாகக் காதில் விழுந்தது. சசியின் மடியில் அப்படியே மடங்கிப் படுத்தாள்.

கோபால்! நீ செய்யுறது நன்றாக இல்லை! மேலிடத்துக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியும்ல!

ராவ்! நான் பிறந்த அன்னைக்கே எங்க அப்பா யாரு,அம்மா யாருன்னு தெரியாமல் வளந்துட்டேன். அதுவும் பார்த்தசாரதி புளியோதரையும்,சர்ச் கேக்கும் நிறைய உள்ளே போயிருக்கு! அதனால் பயம்னா என்னன்னு தெரியாது.

இதுக்கு நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இது இந்தியா..தெரியுமா? இங்கே பெண்களைத் தொட்டால் சட்டங்கள் இல்லை என்று நினைத்து விடவேண்டாம்.

சசி கதவை மடாரெனத் திறந்து வெளியே வந்தாள். ராவ்! நான் வேணும்னா நடிக்க வரட்டுமா! என நக்கலாகக் கேட்டாள். உன்னை வைத்து அழகிய கிழவின்னு வேணும்னா படம் எடுக்கலாம். அப்ப கூப்பிட்டுக்கறேன்...சரி ராவ்! வீ குப்பையா இருக்கு....கூட்டி துடைக்கணும் என்றபடி கட்டை விளக்குமாறை உள்ளங்கையில் தட்டியபடி பேசினாள். இனி நடக்கப்போவதைப் புரிந்துகொண்ட ராவ் சந்தடி கேட்காமல் கிளம்பினான்.

                                                7.கார்த்திகை

மடங்கியபடி படுத்துத் தூங்கிவிட்ட கனிஷ்காவை உற்று நோக்கியபடி இருந்தாள் சசி.

இவளை அவங்க அப்பாகிட்டே சேர்க்க முடியாதா?

உனக்கு அவ இங்கேயிருந்தால் பாரமா?

இல்லை!  வேற்று மனிதனை உள்ளே விட்டால் உன்னை உலகம் அசிங்கமாகப் பேசும்.

மனசாட்சிதான் கடவுள். உன் வயித்துல இருக்கிற குழந்தைக்கு மட்டும்தான் நான் தகப்பன். கருவறை என்பது ஒருவனுக்குத்தான் என்பது உன் கொள்கை. அதுபோலத்தான் நானும் உன் கருவறைக்கு மட்டும்தான் நான் சொந்தக்காரன்.

சரி! அப்ப அவங்க அப்பா வீரபத்திரன்கிட்டே பேசுங்க!

என்னன்னு பேசட்டும் சசி!

வீரபத்திரன் நல்லாள் மருத்துவமனை பக்கத்துல ஏதோ புதையல் தேடுகிற குழுவுல சேர்ந்துட்டதா தகவல் வந்திருக்குன்னு மேரி மேடம் சொல்லிட்டு இருந்தாங்க!

புதையலா!

சோத்துக்கே வழியில்லாம பொஞ்சாதி செத்துப்போயிருக்கா! அந்தக் குழந்தையை வேற போய் வாங்கணும்!

அப்ப நம்ம வீட்டுல நாலு ஜீவன்களா?

வயித்துல இருக்கிறதைச் சேர்த்து ஐந்து வரும். பணம் சம்பாதிக்கிறது போதுமா?

கடவுள் கைகொடுப்பார் எனச் சிரித்தபடி நல்லாள் மருத்துவமனைக்குக் கிளம்பினான் கோபால்.

கார் கதவைத் திறந்து உள்ளே ஏறுவதற்குள் காருக்குள்ளிருந்து மது வாடை வந்தது. பின்சீட்டில் வீரபத்திரன் சிவந்த கண்களுடன் இருப்பதைப் பார்த்தான்.

கோபாலுக்குச் சுருக்கென்று இருந்தது.

தண்ணி அடிச்சவன்கிட்டே பேச முடியாது. இவனை எப்படி நகர்த்துறது என யோசித்தான்.

கோபாலு! என் பொண்ணு இங்கே இருக்கான்னு ரெட்டி சொன்னான்.

நீ இப்ப நிதானத்துல இல்லை! போய்ட்டு நாளைக்கு வா!

நான் ரெட்டிக்கு வாக்கு குடுத்திருக்கேன். அவளை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா!

அவ சின்னப்பொண்ணு! படிக்கட்டும் வீரபத்திரா!

நீ யாரு அதைச் சொல்ல!

ஏற்கனவே என் பொஞ்சாதி எனக்கூறி வாய் விட்டு அழ ஆரம்பித்தான். ஒரு பொம்பளைக்கு என்ன குறை வைச்சேன்..இப்படி போய்ட்டாளே!

நீ நடிக்கிறேன்னு எனக்குத் தெரியும். பிணமா விழுந்தவ கழுத்துல தங்கம் இருக்கான்னு பார்க்கிற ஆளு நீ!

கருப்பு உடை அணிந்த உருவம் ஒன்று தனது வீட்டிற்குள் செல்வதை கோபால் கவனித்தான். கார்த்திகை மாதம் விரதம் இருந்து நேர்த்தியாகவே மாலையணிந்து பாட்டை வீரபத்திரன் கார் ரேடியோவில் போட ஆரம்பித்தான்.

வீரபத்திரா! என் வீட்டிற்குள் போனது யாரு?

தெரியலை! பெயர் மும்தாஜ்னு சொன்னாங்க!

வீரபத்திரனின் முகம் எகத்தாளமாக மாறியது.

உங்க அப்பா பெயர் என்ன கோபால்?

கோபாலின் முகம் சிவக்கத் தொடங்கியது.

கையில் என்ன ஃபைல் வீரபத்திரன்? ஏதோ புதையல் பத்தி ஆராய்ச்சி செய்யுற வெளிநாட்டோடு எல்லாம் சேர்ந்து என்னவோ செய்கிறாயே? இது நாட்டிற்குச் செய்யும் துரோகம் இல்லையா?

மித்திர பட்டினத்தில் வேற்று மனிதர்களின் கால்தடம் பதிந்ததற்கான ஆதாரங்களை சுமார் 35 வருடங்களுக்கு முன்னாடி ஒரு வெளிநாட்டுக்குழு ஆராய்ச்சி செய்தது. அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி உங்க ஆத்தா அதான் உங்க அம்மா நடுவுல புகுந்து கலக்கிட்டா!

 எங்க அம்மா யாருன்னு உனக்குத் தெரியுமா வீரபத்திரா!?

நிஜமாகவே உனக்கு இதுவரை தெரியாதா கோபால்?

இல்லை! சத்தியமாக இதுவரை நான் என் அம்மாவைப் பார்த்தது இல்லை. அந்த முகத்தை நான் பார்க்க விரும்புகிறேன்.

இப்ப அவங்க ரொம்ப பெரிய ஆளு! உனக்கும் உங்க அம்மாவுக்கும் பதினைந்து வயது வித்தியாசம் இருக்குமா?

இப்ப உனக்கு 35. அப்ப உங்க அம்மாவுக்கு 50.

ஆமாம்! அந்த அம்மா வேறு யாருமில்லை.கருப்பு உடை போட்டுக்கிட்டு உள்ளே போனாங்களே!

வேகமாக வீட்டை நோக்கி ஓடினான் கோபால்.

கருப்பு உடையை நீக்கிவிட்டு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அந்த தாயை ஏறிட்டு நோக்கினான் கோபால்.

கோபால்! அவன் பிள்ளையை அவனிடம் ஒப்படைத்துவிடு! என முகம் சிவக்க கத்தினாள் மும்தாஜ்.

தாயை இத்தனை வருடம் கழித்து பார்க்கிறோமே! அம்மா வாயால் ‘கோபால்‘ என அன்புடன் கூப்பிடுவார்கள் என நினைத்தவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

                                                                 8.மார்கழி

அம்மாவைப் பார்த்தவுடன் என்ன பேசுவது என்றே புரியவில்லை.

கோபால்! என்னை ஏன் அப்படி முறைச்சு பார்க்கிறே?

இல்லை! என் அம்மாதானான்னு பார்க்கிறேன்.

கண்களில் பாச உணர்வு தெரிந்தாலும் வந்த வேலை முடியவேண்டுமே! கண்களை சுவர் பக்கமாகத் திருப்பிக்கொண்ட மும்தாஜ் சசி! கனிஷ்காவை அவள் அப்பாகிட்டே அனுப்பிடு!

முடியாது அம்மா! அதைச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கிடையாது.

கோபால்! நீ அதைச் செய்யலைன்னா ரெட்டி என்னை வேற ஒரு விஷயத்திற்காக டார்ச்சர் தருவான்.

ரெட்டியும்,ராவும் எப்படிப்பட்ட ஆளுங்கன்னு எனக்குத் தெரியும்.

கோபால்! புதையல் சம்பந்தப்பட்ட இடம் எனக்கு மட்டும்தான் தெரியும்னு என்னைக் கொல்லக்கூடத் தயங்க மாட்டார்கள்.

இத்தனை வருடமாக எங்கே அம்மா இருந்தீர்கள்?

கனிஷ்காவிற்காக இன்று இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே!

நான் சாப்பிட்டு, தூங்கி, உடல்நலம் பாதித்தபோது எங்கே தாயே இருந்தீர்கள்?

கோபால்! உன்னுடைய எல்லா கேள்விகளும் நியாயமானவைதான்! அதற்கு பின்னாடி விளக்கம் தருகிறேன். நீ அனுப்பவில்லையென்றால் நல்லாள் மருத்துவமனை பின்னாடி நான் சவமாகவேண்டியதுதான்.

அதுக்கு அவசியமில்லை மும்தாஜ் என்றபடி மேரி உள்ளே வந்தார். எதுவாக இருந்தாலும் பயப்படாதீங்க மும்தாஜ்! அன்னைக்கும் பயந்துபோய்த்தான் கோபாலைப் போட்டுட்டு ஓடிட்டீங்க!

வீரபத்திரன் என்னைக் கண்டதும் ஓடி விட்டான்.

அவன்போய் ஊர் கட்டப்பஞ்சாயத்து பேச ஆளைக் கூட்டிட்டு வருவான்.

யார் வந்தாலும் இந்த மேரிகிட்டே நடக்காது மும்தாஜ். சசி! உங்க அத்தைக்கு சாப்பிட ஏதாவது கொடும்மா!

சசி உள்ளிருந்த ஒரு வாழை இலையில் இட்லி,சட்னி,சாம்பார்,குழிப்பணியாரம் என அடுக்கினாள். அதைப் பார்த்ததும் அம்மாவுடன் கோபாலும் ஒரு வாழை இலையைப் போட்டு அமர்ந்து உண்ணத் தொடங்கினான்.

மும்தாஜூக்குக் கண்களில் நீர் நிறைந்தது.

சாப்பிடும்போது ஏம்மா அழறே மும்தாஜ்! நீ உன் பையன்கிட்டேயே இருந்துடு! இந்த புதையல் டாகுமெண்டை என்கிட்டே கொடுத்ததை யார்கிட்டேயும் சொல்லாதே! நிலச்சரிவு,மழை,வெள்ளம் இவற்றால் பூமியில் மாற்றங்கள் நிறைய இருக்கும். இதெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துப்பாங்க! நம்ம சாதாரண ஆளுதான்! தோட்டம்,வீடு, பேரன்,பேத்தின்னு இனிமெலாவது சந்தோஷமா இரும்மா! என்றபடி மேரி நகரப் பார்த்தாள்.

கனிஷ்கா எழுந்தபடி எங்க அம்மா இறந்துட்டாங்க மேடம்! என் தம்பிப்பாப்பாவை ஏன் என்கிட்டே தரமாட்டேங்கறாங்க மேடம் என அழத் தொடங்கினாள்.

கனிஷ்கா! நீ ரொம்ப சுட்டிதானே!

ஆமாம்! உன் தம்பி இப்ப ரொம்ப சின்ன பையன். குழந்தை இல்லாமல் ஒரு குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது! அவங்களுக்கு உன் தம்பிப்பாப்பாவைக் கொடுக்கிறேன்.

நீ கோபால்கிட்டே இரு!

இல்லை மேடம்! என் தம்பி எனக்கு வேணும்! எனக்குன்னு உறவு அவன்தானே! இன்னைக்கு சசி அத்தை பேசுவாங்க! நாளைக்கு அவங்க குழந்தை வந்தபிறகு என்னை விரட்டி விட்டால் நான் எங்கே போவேன்? என் தம்பி வளர்ந்தால் எனக்கு சோறு போடுவான்......ஒரு கைவேலையாவது பார்த்து நானும்,அவனும் பிழைச்சுப்போம்!

அப்ப எங்களை நீ நம்பலையா கனிஷ்கா!

அத்தைன்னு உங்களைக் கூப்பிடறதா! சித்தின்னு கூப்பிடறான்னு புரியலை! இந்த மித்ரபட்டினத்துல பெண்கள் படிக்கணும்! அதுக்கு நான் நிறைய செய்யணும்னு நினைக்கிறேன். மார்கழிமாத பனிமாதிரி என்னை சோகங்கள் மாறி மாறி தாக்கினாலும் விடாமல் இத்தனை வருடம் எங்க அப்பாகிட்டே இருந்து மேரி மேடம் என்னைக் காப்பாத்திட்டாஙக்! வெளியே ரெட்டியும்,ராவும் பருந்துமாதிரி காத்திட்டு இருக்காங்க! என் தம்பி எனக்கு வேணும்! அவன் படிக்கணும்..முத்துலட்சுமிரெட்டிமாதிரி இந்த நாட்டுக்கு சேவை செய்யணும்..

மும்தாஜ் அவளைப் ‘பளார்‘ என அறைந்தாள். கிர்ரென தட்டாமாலை சுற்றி மயக்கமானாள் கனிஷ்கா. அவளைத் தூக்கி அவங்க அப்பன்கிட்டே போடுடா! கோபால்.... இவ இல்லைன்னா மித்ரபட்டினத்தை சாதிக்கலவரம் கொண்டு வந்து ஊரே தீப்பிடிக்க வச்சிடுவானுங்க! இந்த மேரி டேம் ஒண்ணும் செய்ய முடியாது. பூமி இலேசாகக் குலுங்கத் தொடங்கியது. தரை இலேசாக நடுங்கியதை உணர்ந்த கோபால் தலையைப் பிடித்துக்கொண்டான். வெளியில் குழந்தைகள் கிறிஸ்துமஸ்தாத்தாவின் சட்டையைப் பிடித்தபடி நடுங்கிக்கொண்டிருந்ததை சசி பார்த்தாள். என்ன நடக்கிறதென்றே யாருக்கும் புரியவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                             9.தை

தரை குலுக்கிய குலுக்கலில் மக்கள் பயந்து போயிருந்தனர். ஆளாளுக்கு ஒவ்வொருவரும் இன்னமும் இதுபோல பூமியில் நிறைய வரும் என பயம் காட்டிக் கொண்டிருந்ததை சசி கேட்டாள். வெளியில் ஆட்களின் பேச்சு சத்தம் நிறைய கேட்கவே மும்தாஜ் கனிஷ்காவை அப்படியே தரையில் கிடத்தியிருந்தாள்.

அம்மா! நீங்க கனிஷ்காவைத் தூக்கிட்டு போறதை நான் பார்த்திட்டு இருக்க முடியாது. மேரி மேடம்! நீங்க என்ன சொல்றீங்க?

கோபால்! உங்க அம்மா எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

திரும்பவும் பூமி குலுக்கிப் போட ஆரம்பித்தது. வெளியில் பேச்சு சத்தம் குறைந்து சல!சல!வென ஏதோ சத்தம் கேட்டது. வெளியில் வந்த கோபால் அதைப் பார்த்தவுடன் பயந்து விட்டான். அருகில் இருந்த வீடுகள், மரங்கள் அனைத்தும் பூமியின் உள்ளே மறைந்து நீரோடையாக மாறி ஓடிக்கொண்டிருப்பதைக்கண்டு வாய் மூடி மௌனமானான். இப்போது அவன் இருக்கும் இடம்மட்டும்தான் மீதி இருந்தது. அதுகூட காலையில் எப்படி இருக்கும் எனத் தெரியாதே! இப்போது எப்படி வெளியில் போவது என யோசிக்க ஆரம்பித்தான். சாலையே தெரியாத அளவு தண்ணீர் போய்க் கொண்டிருந்தது. அப்போது வானத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்தது. அந்த நூலேணியிலிருந்து ஒரு ஆண் மடமடவென இறங்கி மும்தாஜ்! இங்கே இருக்காங்களா? எனக் கேட்க கோபால் அதிர்ந்தான். அவனது உருவம் அப்படியே அவனைப்போலவே இருந்தது.

தனது அப்பாவாக இருக்குமோ என நினைத்தான். குணா கோபாலா! என்று கூப்பிட மும்தாஜ் குணாவைத் திரும்பிப் பார்த்தாள். குணா! அந்த மரகத பச்சையம்மன் எப்படியும் உனக்கு கிடைக்கப் போகிறதில்லை! ஏன் வீணாக இப்படி வந்து உயிரை வாங்குகிறாய்? என்றாள். சசி இதைக் கேட்டபடி இருந்தாள்.

இந்த மித்ரபட்டினம் முழுவதும் தண்ணீரில்தான் இருந்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் நிலமாக மாறியதாம்! இப்போது பழையபடி நீரில்போகப்போகிறது என நினைக்கிறேன் என்றபடி மும்தாஜ் கொடுத்த வரைபடத்தின் ஒரு பகுதியை உற்றுப்பார்த்தபடி மேரி பேசிக் கொண்டிருந்ததை விழித்த கனிஷ்கா கேட்டுக்கொண்டிருந்தாள்.

அப்ப யாரும் வெளியே போக முடியாதா மேடம்?

போகலாம்.....படகுக்கு சொல்லியிருக்கிறேன். வரும்...

சசி கனிஷ்காவின் காதில் ஏதோ பேசினாள்.

நீ எங்கு இந்நேரத்தில் போகப்போகிறாய் கனிஷ்கா? என்றான் கோபால்.

கனிஷ்கா சசியுடன் வெளியில் தயாராக வந்து நின்ற படகில் ஏறி உட்கார்ந்தவுடன் படகு புறப்பட்டது.

கையில் இருந்த செல்லிடபேசியில் கனிஷ்கா யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

போன தைப்பொங்கலுக்கு நானும், மஞ்சுவும், பச்சையம்மன் கோவிலில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்ப கட்டம் கட்டி விளையாடிக்கொண்டு இருந்தப்ப அரச மரப் பொந்திருந்தது. அதில் போய் ஒளிந்து கொண்டேன். அதில் அவர் தேடுகிற மரகச சிலை இருந்தது. நான் அப்படியே பத்திரமாகத் துணி போட்டு மூடி வைத்திருக்கிறேன். அதில் ஒரு தை மகள்னு குறிப்பும் இருந்துச்சு!  நான் அதைக் கண்டுபிடிச்சேன். அந்த அரச மரத்துக்கு கீழே நிறைய தங்க காசுகள் இருக்கிறது என்றும் போட்டிருந்தது. இப்ப தண்ணியாக இருக்கு! அது இருக்குமோ! அதான் வேகமாகப் போகிறோம். நீ பக்கத்துலதானே இருக்கே! ஒரு எட்டு பார்க்கறியா இனியா! என்றாள்.

மறுமுனையில் வந்த செய்தி அவளுக்கு இனிமையாகத்தான் இருந்தது.

இருக்கா! இருக்கா! .............முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன்  செல்லிடபேசியை அணைத்தாள்.

படகு விரைந்து மரத்திற்கருகில் சென்றது.

கனிஷ்கா மரத்திற்கருகில் இனியா கையில் அவள் தம்பியுடன் நிற்பதைப் பார்த்தாள். மணல்திட்டில் அவளருகில் பாய்ந்து சென்று தம்பியை வாங்கினாள்.

மரத்தின் பின்னால் உள்ள பொந்தில்  ஒளித்து வைத்திருந்த சிலையைக் கையில் எடுத்தாள்.

சசி அதை வெடுக்கென அவளிடம் இருந்து பறித்தாள். அந்த தங்க காசுகளையும் கொடு! என மிரட்டினாள். அவள் முகமே மாறித் தெரிந்தது.

சசி ஆன்ட்டி! இது அரசுக்கு சேர வேண்டிய சொத்து! இதை மக்கள் எடுக்க முடியாது.

அது எனக்குத் தெரியும். இதை நீ இப்போது காட்டினால் உன்னை சாதியைக் காரணம் காட்டி கொன்று சிலையை எடுத்துச் சென்று விடுவார்கள் எனக்கூறி முந்தானையால் கிடைத்தவற்றை முழுவதுமாக மறைத்தாள். இனியா நீ யாரிடமும் இது குறித்து பேசாதே! என்றபடி படகுக்காரரே! நேராக வண்டியை சொக்கலிங்கபுரத்திற்கு மாத்தி திருப்புங்க!

படகு மாறிப் போவதைப் பார்த்ததும் குணாவும்,மும்தாஜூம் கதி கலங்கினர்.

மித்ரபட்டின வீட்டிலிருந்து வெளியில் வர இன்னொரு படகைத் தயார் செய்து வரவழத்திருந்தனர்.

மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

சோவென பெய்த மழையில் நிலம் அதிகமாக விரிசல் விட ஆரம்பித்திருந்தது. குணா இருந்தபடகை நோக்கி   வேகமாக அடித்து வந்த பெரிய மரம்  மோதியது. குணாவும்,மும்தாஜூம் நீரில் விழுந்து மறைய ஆரம்பித்தனர். இதை மேரியும், கோபாலும் பயந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மரகச் சிலைஎடுக்க வந்தவங்க கதியைப் பார்த்தாயா கோபால்...

ஆமாம் மேடம்! சசி இப்பதான் ஃபோன் செய்தாள். சொக்கலிங்கபுரம் கோவிலில் அந்த சிலையையும்,காசுகளையும் கொடுத்துட்டாளாம்! அரசாங்கம் அதற்குப் பரிசா கனிஷ்காவையும், அவள் தம்பிக்கும் பாதுகாப்பாக இருக்குமாம். இரண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கவேண்டியது அரசு பொறுப்பாம்!

மழை நின்று விட்டது. சுற்றி இருந்த தென்னை மரங்கள் பெய்து முடித்த மழைக் குளியலில் நனைந்த கீற்றுகளைக் காற்றில் வீசிக் காய வைத்துக் கொண்டிருந்ததை மேரி பார்த்தபடி இருந்தாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

https://storymirror.com/read/poem/tamil/oim2m0hc/pukaiyillaa-pooki/detail