திரௌபதி
திரௌபதி
என்னவென்று நினைத்து
என்னை நீ படைத்தாயோ
வியாச பெருமானே!
பாரதப்போருக்கே காரணமாய்
பாரெங்கும் பல்லாயிரக்கணக்கான
வருடங்கள் கடந்தும்
பேசப்படுகின்ற பாடுபொருளாய்
என்னை ஏன் படைத்தாயோ!
பெண்ணென்று புவிதனில்
உதித்தபோதே உனது
மனதில் எழுந்த கற்பனையில்
எனக்கு ஐந்து கணவர்களை
உருவாக்கியதால் உனக்கென்ன
மனமகிழ்ச்சி!
ஐவரோடும் மகிழ்வோடு
மேற்கத்திய பாணி குடும்பம்
நடத்தும் கலையை
உலகிற்கு கற்றுக் கொடுக்கவே
கற்பனைப் பாத்திரமாய்
என்னை நீ படைத்தாயோ!
ஆணின் விகாரமனம்
உனக்கும் உண்டு என்பதை
உறுதி செய்கிறாயா வியாச பெருமானே!
கற்பனா பாத்திரம்தான் என்றாலும்
துச்சாதனன் வரலாறு
இன்றும் பல இடங்களில்
தொடர்வது உன்னால்தானன்றோ!
பணிச் சுமையினால் பாரதிதாசனின்
குடும்பவிளக்குப் பெண்கள்
ஆறடி கூந்தலை அரையடியாக்கி
குழந்தைப் படிப்பிற்காக ஓடும்போது
இன்னமும் பெண் ஏன்
துச்சாதனனிடமும் துரியோதனிடமும்
மன்றாடவேண்டும்!
மானம் காக்க இதிகாசத்தினில்
வேண்டுமானால் வண்ணவண்ணமாக
புடவை வரலாம்!
நவீன யுகத்தில் பெண் மானம்
காக்க சேலை வருமா வியாச பெருமானே!
அரசியல் பரமபதத்தில் பாம்புகள்
அநீதியை எதிர்க்கும்
கடவுளின் பெண்குழந்தைகளை
மானபங்கப்படுத்தும் நிகழ்வுகளைத்
தடுக்க பாலியல் தடுப்பு
சட்ட வல்லுநராக அம்பேத்கர்தான்
இனி வருவாரோ வியாச பெருமானே!
ஊசிமுனையளவு இடம்கூட தர
மறுத்த வரலாறை மட்டும் மையப்படுத்தி
எழுதியிருக்கலாமே வியாச பெருமானே!
கல்விக்கண் திறந்த காமராசர் வழி
நிற்க பல காமராசர் உருவாக
புதிய மகாபாரதத்தை
எழுத எப்போது வருவாய் வியாச பெருமானே!
கருத்துகள்
கருத்துரையிடுக